ஓய்வை அறிவித்த ஹென்ரிச் கிளாசன்..!
தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அவரின் இந்த திடீர் முடிவால் அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர். சமீபத்தில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், புகழ்பெற்ற பேட்ஸ்மேன் டீன் எல்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்து கடைசி போட்டியில் விளையாடினார்.
தற்போது கிளாசன் தனது ஓய்வு முடிவை அறிவித்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இருப்பினும், வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கிளாசன் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவில், நான் சரியான முடிவை தான் எடுக்கிறனா என பல இரவுகள் தூங்காமல் யோசித்தேன்.
டெஸ்ட் கிரிக்கெட் என்னுடைய விருப்பமான ஒன்று. இதிலிருந்து ஓய்வு பெறுவது நான் எடுத்து கடினமான முடிவு. மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நான் சந்தித்து இன்னல்கள் தான் இன்று என்னை ஒரு சிறந்த வீரனாக மாற்றி உள்ளது” என தெரிவித்துள்ளார்.
ஹென்ரிச் கிளாசன் டெஸ்ட் வாழ்க்கையைப் பற்றி பேசுகையில், கிளாசென் 2019 இல் இந்தியாவுக்கு எதிராக அறிமுகமானார். ஆனால், அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவரது டெஸ்ட் வாழ்க்கையில் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். 4 போட்டிகளில் 104 ரன்கள் எடுத்தார். இந்த போட்டிகளில், அவரால் சதமோ, அரை சதமோ அடிக்க முடியவில்லை.
ஹென்ரிச் கிளாசென் 85 முதல் தர போட்டிகளில் 5347 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 12 சதங்களும், 24 அரைசதங்களும் அடித்துள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவுக்காக 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் அவர் நான்கு சதங்களுடன் 1723 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில், 43 போட்டிகளில் 722 ரன்கள் எடுத்துள்ளார். அதே நேரத்தில், ஐபிஎல்லில் 19 போட்டிகளில் 504 ரன்கள் எடுத்துள்ளார்.