ஈரானில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள்: உடல் சிதறி 73 பேர் பலி!
ஈரானில் அடுத்தடுத்த நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்கா டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்தார். அவரது நினைவு தினம் இன்று ஈரானில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. கெர்மன் நகரில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று குழுமியிருந்தனர். அப்போது திடீரென அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்து சிதறின.
இந்த குண்டுவெடிப்பில் 73 பேர் உயிரிழந்திருப்பதோடு, 171 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குண்டு வெடிப்பின் போது ஏராளமான எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் குண்டு வெடிப்பின் போது இந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியதா என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள அந்நாட்டு அரசு, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமானோர் அந்த பகுதியில் குவிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சம்பவ இடத்தில் தற்போது அந்நாட்டு ராணுவமும், பொலிஸாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.