பொது வெளியில் சிறுநீர் கழித்த கருப்பின சிறுவன் கைது; அமெரிக்காவில் வலுத்துள்ள எதிர்ப்பு
அமெரிக்காவில் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததாக 10 வயது கருப்பின சிறுவன் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தில் தாயுடன் வெளியில் சென்றிருந்த 10 வயது சிறுவன் ஒருவன், காருக்கு பின்னால் சிறுநீர் கழித்துள்ளான். இதனை பார்த்த காவல்துறையினர் சிறுவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு 10 வயது சிறுவனை சிறையில் பூட்டி வைத்திருந்ததாக குழந்தையின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நீதிபதி சிறுவனுக்கு 3 மாத காலம், காவல் அதிகாரி ஒருவரின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் எனவும், மறைந்த கூடைப்பந்து வீரர் கோபி பிரையண்ட் குறித்து இரண்டு பக்கங்களுக்கு எழுதி சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தண்டனை வழங்கியுள்ளார்.
தற்போது இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் எனவும், பொதுவெளியில் சிறுநீர் கழிக்காத ஆண்கள் அமெரிக்காவிலேயே கிடையாதா எனவும் குழந்தையின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த குற்றத்திற்காக குழந்தையை மாதம் ஒருமுறை மேற்பார்வை அதிகாரியை சந்திக்க சொல்வது, ‘மேற்பார்வை தேவைப்படக்கூடிய குழந்தையாக’ அவரை சித்தரிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுவன் கருப்பினத்தவர் என்பதற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாகவும், தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. இதனிடையே இது குறித்து பேசி உள்ள காவல்துறையினர், குழந்தைக்கு விலங்கு எதுவும் மாட்டப்படவில்லை எனவும் குழந்தையிடம் சரியாக நடந்து கொள்ளாத காவல்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை பல்வேறு அமைப்புகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.