தாய்லாந்து-அதிவேகத்தில் மரத்தில் மோதி இரண்டாக பிளந்த பேருந்து…14 பேர் உடல் நசுங்கி பலியான சோகம்!
தாய்லாந்து நாட்டில் மரத்தின் மீது மோதி பேருந்து விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று தாய்லாந்து. உலக சுகாதார அமைப்பின் ஆய்வின்படி, ஆண்டுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் தாய்லாந்தில் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளைத் தவிர்க்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இதுவரை பலனளிக்கவில்லை. இந்நிலையில் பேருந்து ஒன்று, மரத்தில் மோதி விபத்திற்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் பேங்காக்கில் இருந்து மேற்கு பகுதியில் உள்ள நா தவி மாகாணத்தின் சோங்க்லா பகுதிக்கு 46 பயணிகளுடன் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து என்பதால், பயணிகள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நள்ளிரவு ஒரு மணி அளவில், பிரச்சுவாப் கிரி கான் மாகாணம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த மரத்தின் மீது பயங்கரமாக மோதியது.
அதிவேகத்தில் வந்த பேருந்து விபத்தில் சிக்கியதால், பேருந்தின் முன்பகுதி இரண்டாக பிளந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 32 பேரை மீட்ட மீட்புப்படையினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.