AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தாக்கும் இஸ்ரேல் – உலக நாடுகளில் அதிகரிக்கும் பதற்றம்!
போர் நிறுத்தத்துக்குப் பிறகு இஸ்ரேல் தொடங்கியிருக்கும் காசாவின் மீதான தாக்குதலில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை இஸ்ரேல் பயன்படுத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. கோஸ்பெல் எனப் பெயரிடப்பட்டுள்ள இஸ்ரேலின் AI அமைப்பு தாக்க வேண்டிய இலக்குகளை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தற்காலிக போர் நிறுத்தம் முடிவுற்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் மீண்டும் துவங்கியுள்ள நிலையில், முதல் சில மணிநேரங்களிலேயே 178 பேரை இஸ்ரேல் கொன்று குவித்துள்ளதாகக் காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 200 ஹமாஸ் இலக்குகளை இதுவரைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் உள்ள போராளிகளும் இஸ்ரேலின் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காசாவில் தாக்குதல் இலக்குகளை உருவாக்க இஸ்ரேல் ராணுவம் ‘கோஸ்பெல்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.கோஸ்பெல் எனப்படும் செயற்கை நுண்ணறிவு முதன்முதலில் 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற 11 நாட்கள் போரில் பயன்படுத்தப்பட்டது. இந்த AI தொழில்நுட்பமானது இயந்திர வழி கற்றல் மற்றும் மேம்பட்ட கணினி தொழில்நுட்பத்தின் மூலம் ராணுவத்துக்கான இலக்குகளை உருவாக்கிக் கொடுக்கும் திறன் கொண்டது.
2019ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட ஹப்சோரா எனப் பெயரிடப்பட்ட (ஆங்கிலத்தில் கோஸ்பெல்) AI தொழில்நுட்பம், காசாவில் தாக்குதல் நடத்துவதற்கான இலக்குகளை விரைவாக உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவு உள்ளீடுகளின் அடிப்படையில் மிக விரைவாகவும், தானியங்கி முறையிலும் இலக்குகளை கோஸ்பெல் உருவாக்குகிறது. இவை உளவுப் பிரிவின் கணினி தருகிற பரிந்துரைகள் மற்றும் அதிகாரிகளின் கண்டறிதல் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன.
ஹமாஸ் பிரிவினரின் செயல்பாட்டு தளங்கள் மற்றும் தங்கும் இடங்கள் ஆகியவற்றை கண்டறிய இந்த AI பயன்படுகிறது. மேலும் இந்த AI தொழில்நுட்பமானது சந்தேகத்தின் அடிப்படையிலும், 30,000 முதல் 40,000 பேர் கொண்ட பட்டியலை உருவாக்க உதவியுள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த AI போர் தொழில்நுட்பம் சர்வதேச மற்றும் மாநில அளவிலான போர் ஒழுங்குமுறைகளுக்குள் உட்படாது என்பது குறிப்பிடத்தக்கது.