தடை விதித்துள்ளஅமெரிக்கா… 2 வாரமாக நடுக்கடலில் காத்திருக்கும் ரஷ்ய கப்பல்; செய்வதறியாது தவிக்கும் இந்தியா!!
கச்சா எண்ணெய்யை இறக்குவதற்காக, குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் நுழைவதற்கு இந்திய அரசின் அனுமதிக்காக ரஷ்ய சரக்கு கப்பல் இரண்டு வாரங்களாக லட்சத்தீவு கடற்பகுதியில் காத்திருக்கிறது.
‘என்எஸ் சென்ஞ்சுரி’ என்ற அந்த கப்பல், அமெரிக்காவால் தடைவிதிக்கப்பட்ட 5 கப்பல்களில் ஒன்றாகும். ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
‘என்எஸ் சென்ஞ்சுரி’ கப்பல் மீது அமெரிக்காவின் தடை இருப்பதால் அதனை குஜராத்தின் வடினார் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா என்ற பரிசீலனையில் இந்திய அரசு உள்ளது. ‘என்எஸ் சென்ஞ்சுரி’ கப்பல் ஏற்றி வந்துள்ள கச்சா எண்ணெய்யை வடினார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யும் அளவுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், நயாரா எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் இருப்பு வைக்கும் வசதி உள்ளது. ‘என்எஸ் சென்ஞ்சுரி’ கப்பலில் கச்சா எண்ணெய், தங்களுக்கு கொண்டுவரப்படவில்லை என ரஷ்யா நிறுவனத்துக்கு சொந்தமான நயாரா எனர்ஜி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எண்ணெய் விற்பனை துறையை சேர்ந்த அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், ‘என்எஸ் சென்ஞ்சுரி’ கப்பல் மூலம் இதற்கு முன்னர் நான்கு முறை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வந்து இறக்கியுள்ளது. ஒருவேளை ‘என்எஸ் சென்ஞ்சுரி’ கப்பலை வடினார் துறைமுகத்துக்குள் அனுமதிக்க இந்திய அரசு தயங்குமேயானால், நடுக்கடலில் வேறு கப்பலுக்கு எண்ணெய்யை மாற்றி, அந்த கப்பல் மூலம் கச்சா எண்ணெய், வடினார் துறைமுகத்துக்குள் சென்று இறக்கப்படும் என தெரிவித்தார்.
‘என்எஸ் சென்ஞ்சுரி’ கப்பல் ரஷ்யாவுக்கு சொந்தமானது என்றாலும், அதில் லைபீரியா நாட்டு கொடி கட்டப்பட்டுள்ளது. வரி மற்றும் இதர காரணங்களுக்காக இதுபோன்று செய்வது கப்பல் வணிகத்தில் வழக்கமான ஒன்றுதான் என கூறப்படுகிறது.