ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக்கைதிகளின் எண்ணிக்கை தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் இரண்டாவது முறையாக 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், காஸாவில் மீண்டும் ராணுவ தாக்குதலை நேற்று காலை முதல் தொடங்கி இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹமாஸ் படையினர் போர்நிறுத்தத்தை மீறி விட்டதாகவும், போர் நிறுத்தத்தை மதிக்காமல் 2 ராக்கெட் தாக்குதலை நடத்தியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் பிடியிலிருந்து பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் இஸ்ரேல் தன்வசம் சிறையில் இருந்த பாலஸ்தீனர்களைப் பதிலுக்கு விடுதலை செய்துள்ளது.
இந்த நிலையில் ஹமாஸ் படையினர் பிடியில் இன்னும் 137 பிணைக்கைதிகள் இருப்பதாக இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் எய்லோன் லெவியை மேற்கோள் காட்டி, டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தகவல் தெரிவித்துள்ளது.
பிணைக் கைதிகள் பரிமாற்றத்தில் மொத்தமாக இதுவரை 110 பேர் வீடு திரும்பி இருப்பது தெரியவந்துள்ளது. ஹமாஸ் படையினரிடம் உள்ள பிணைக்கைதிகளில் 115 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள், 3 குழந்தைகள் உள்ளனர், அதில் 10 பேர் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 137 பிணைக் கைதிகளில் 126 பேர் இஸ்ரேலியர்கள் என்றும், 11 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிணைக் கைதிகள் இனி எப்போது மீட்கப்படுவார்கள்? எப்படி மீட்கப்படுவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அவர்களின் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.