ஆஸ்திரேலியா அணிக்கு 223 ஓட்டங்கள் இலக்கு
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில், தொடரின் மூன்றாவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெறுகிறது.
இரு அணிகளிடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 39 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர் 57 பந்துகளில் 123 ரன்களை குவித்தார். திலக் வர்மா சிறப்பாக ஆடி 31 ரன்களை குவித்தார்.
போட்டி முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் கேன் ரிச்சர்ட்சன், பெரன்டார்ஃப் மற்றும் ஆரோன் ஹார்டி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.