இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டம்!
இலங்கையில் அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஆளும் கட்சி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 2025 க்கு முன் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதில் ஆளும் கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவை பொதுக் கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இது தொடர்பான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.