ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் மீது வழக்குப்பதிவு
கடந்த 19-ஆம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதியது. இதில், இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 240 ரன்கள் எடுத்தனர்.
அதனை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். இந்திய அணி கோப்பை கைப்பற்றாமல் தோல்வியடைந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதனால் தங்களது ஆதங்கத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வந்த நிலையில், மிட்செல் மார்ஷலின் செயல் சோகத்தில் இருந்த ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் உலகக்கோப்பைக்கு மேல் தனது கால்களை வைத்து இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
இவரின் செயல் ரசிகர்களை கொந்தளிப்புக்கு ஆளாக்கியது. இந்த நிலையில், உத்தர பிரதேசத்தை சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக் கோப்பை மீது கால் வைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதை புண்படுத்தியதாக கூறி மிட்செல் மார்ஸ் மீது புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மிச்சல் மார்ஸ் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இந்த புகார் மனுவில் மிர்செல் மார்ஷ் இனி இந்தியாவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க கூடாது என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இந்திய அணி வீரர் முகமது சாமி தலையில் தூக்கி வைக்க வேண்டிய உலகக்கோப்பையை காலில் போட்டு மிதிப்பது கடும் வருத்தத்தை அளிக்கிறது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.