ஆப்கானிஸ்தானை அதிரவைத்த நிலநடுக்கம் – அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்!
ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென 4.1 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூக்கத்தில் இருந்த மக்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக பல நிலநடுக்கங்கள் அதிர்வை மட்டுமே ஏற்படுத்தி செல்கின்றன. இருப்பினும் சில நிலநடுக்கங்கள் பெரும் எண்ணிக்கையில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன.
இந்நிலையில்தான் ஆப்கானிஸ்தானில் நள்ளிரவில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு வசிக்கும் மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் தூக்கத்தில் இருந்தவர்கள் கண்விழித்து வீடுகளை விட்டு வெளியே வந்து திறந்த வெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது. இதுபற்றி அந்த மையம் தனது எக்ஸ் பக்கத்தில், “ஆப்கானிஸ்தானில் பூமிக்கடியில் 73 கிலோமீட்டர் ஆழத்தில் நள்ளிரவு 12.03 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகி உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் தொடர்பாக வெளியான முதற்கட்ட தகவலில் அதிர்ஷ்டவசமாக உயிர் பலி எதுவும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் பிற பாதிப்புகள் குறித்த எந்த விபரமும் உடனடியாக தெரியவில்லை.