விரைவில் உடன்பாடு எட்டப்படலாம் – ஜோ பைடன் நம்பிக்கை
ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் பிடியில் உள்ள பிணையாளிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு விரைவில் எட்டப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இடையிடையே சண்டையை நிறுத்துவதற்குப் பரிமாற்றமாகப் பிணையாளிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிகிறது.
ஹமாஸ் குழுவினரைச் சந்தித்துப் பேசவிருப்பதாக அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமும் தெரிவித்துள்ளது. அதனால் விரைவில் உடன்பாடு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.
அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து 28 குறைப்பிரசவக் குழந்தைகளை வெளியேற்றுவதில் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் முக்கியப் பங்காற்றியது. அந்தக் குழந்தைகள் தற்போது எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பிணையாளிகளை விடுவிக்கும் உடன்பாட்டை எட்டுவதில் சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகளே இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றுக்குத் தீர்வு காணும் முயற்சியில் கத்தார் ஈடுபட்டுள்ளது.