உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவவுள்ள வடகொரியா; கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றம்
தென் கொரியாவின் எச்சரிக்கையையும் மீறி, உளவு செயற்கைக்கோளை ஏவ வட கொரியா தயாராவதால், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் சூழ்ந்துள்ளது. இதனால் உக்ரைன், காசா வரிசையில் உலக நாடுகளின் கவலையில் கொரியாவும் சேர்ந்திருக்கிறது.
வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான ஏற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று, தென் கொரிய ராணுவம் இன்று(நவ.20) எச்சரிக்கை விடுத்தது.நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 2 முறை உளவு செயற்கைக்கோளினை ஏவும் முயற்சியில் வடகொரியா தோல்வி கண்டிருக்கிறது. எனினும் 3வது முறையாக அடுத்த உளவு செயற்கைக்கோளினை ஏவும் முயற்சியில் தீவிரமாக உள்ளது.
தங்களது உளவுத் தகவல்களின் அடிப்படையில், இந்த வாரத்தில் வட கொரியா தனது உளவு செயற்கைக்கோளை ஏவ இருப்பதாக தென் கொரிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷின் வோன் சிக் தெரிவித்தார்.
இது தொடர்பாக, ”ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான தயாரிப்புகளை உடனடியாக நிறுத்துமாறு வட கொரியாவை நாங்கள் கடுமையாக எச்சரிக்கிறோம். எச்சரிக்கையை மீறி ராணுவ உளவு செயற்கைக்கோளை ஏவ வடகொரியா முயற்சித்தால், எங்கள் நாட்டு மக்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எங்கள் ராணுவம் மேற்கொள்ளும்” என்று தென் கொரிய ராணுவத்தின் தலைமை இயக்குனரான காங் ஹோ-பில் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான் ராணுவத் தாக்குதல் காரணமாக, ஆயுத தளவாடங்களின் தட்டுப்பாட்டில் தவிக்கும் ரஷ்யாவுக்கு, தனது ஆயுதங்களை வட கொரியா வாரி வழங்கி வருகிறது. பதிலுக்கு ரஷ்யா தனது விண்வெளி தொழில்நுட்பங்களை வட கொரியாவுக்கு திறந்து விட்டிருக்கிறது.
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் அதன் நட்பு நாடுகளின் எச்சரிக்கையை புறக்கணித்து, வடகொரியா இந்த ஆண்டின் தொடக்கம் முதலே அதிக ஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது. தென் கொரியா மீதும், அவசியமெனில் அமெரிக்கா மீதும், தாக்குதல் தொடுக்க வட கொரியா தயாராகி வருகிறது. தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கிலும், எதிரிகளின் நகர்வுகளை ஒற்றறியவும் உளவு செயற்கைக்கோளை வட கொரியா ஏவத் தயாராகிறது.