ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவு
தற்போது வெளிநாட்டில் இருக்கும் பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவை இலங்கை வரும் போது விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாதிரியார் நாட்டிற்கு வந்த பின்னர் 48 மணி நேரத்திற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் டிஜிட்டல் தடயவியல் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பின்னர், குறித்த பாதிரியாருக்கு எதிராக வழமையான சட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ சமர்ப்பித்த மனுவுக்கு இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொரேஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்மானத்தை எட்டியுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ கடந்த ஏப்ரல் மாதம் ஆராதனை ஒன்றின் போது தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பௌத்தம் உள்ளிட்ட ஏனைய மதங்களை அவமதித்ததாக பல்வேறு தரப்பினரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடுகளை சமர்ப்பித்திருந்தனர்.
அதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மனுதாரர் போதகருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக விசாரணைகளை நடத்த குற்றப் புலனாய்வு திணைக்களம் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் எனவே தம்மை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறும் கோரி சட்டத்தரணிகள் ஊடாக ஆயர் மனு தாக்கல் செய்திருந்தார்.