கோட்டா, மகிந்த மற்றும் பசில் ஆகியோரே காரணம்!! உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் உள்ளிட்ட பிரதிவாதிகளே காரணம் என உயர் நீதிமன்றம் இன்று (14) அறிவித்துள்ளது.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட நபர்கள் பொது நம்பிக்கை மற்றும் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலித்து தீர்ப்பை அறிவித்த 5 பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
எனினும் நீதியரசர் பிரியந்த ஜயவர்தன மட்டும் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என தனியாக தீர்ப்பறிவித்தார்.
அத்துடன் பிரதிவாதிகள் , மனுதாரர்களுக்கு 150000 ரூபாவை வழக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.
மூன்று பல்கலைக்கழக புத்திஜீவிகள், இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரரும் பயிற்றுவிப்பாளருமான ஜுலியன் பொல்லிங், இலங்கை வர்த்தகப் பேரவையின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன, ட்ரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் ஜெஹான் கனக ரத்ன ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சீரற்ற நிதி நிர்வாகம் ஆகியவற்றுக்கான முக்கிய பொறுப்பாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அம்மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களில் மொத்தமாக 39 பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.