காசாவில் பெரிய மருத்துவமனையில் சேவை நிறுத்தம்… 3 குழந்தைகள் பலி!
இஸ்ரேலின் தொடர் தாக்குதல் காரணமாக காசாவில் உள்ள பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
காசா மீதான இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்தும் தொடர்கிறது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 11 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு காசா பகுதியில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இதனால், மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து, நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சிகிச்சை நிறுத்தப்பட்டதை அடுத்து, குழந்தைகள் வார்டில் 3 குழந்தைகள் உயிரிழந்து விட்டன.
36 குழந்தைகள் கொண்ட பிரிவில் கைகளால் செயற்கை சுவாசம் அளிக்கும் அவல நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். அல்-ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் ராணுவம் நாளா புறமும் சுற்றி வளைத்துவிட்டது.
மருத்துவமனையில் 400 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், போரினால் புலம் பெயர்ந்த 20,000 பேர் மருத்துவமனை வளாகத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே மயக்க மருந்து இல்லாமல் குழந்தைகள், பெரியவர்களுக்கு வலியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த கொடுமைக்கு மத்தியில் தற்போது பெரிய மருத்துவமனையில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஸா மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.