காசாவிற்கு மனிதாபிமான உதவி; உலக நாடுகளுடன் மாநாட்டை நடத்தும் பிரான்ஸ்
காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து குண்டுவீச்சு நடத்தி வரும் நிலையில், பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக உலக நாடுகளுடன் மாநாட்டை நடத்த பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.
பிரான்ஸ் 80 நாடுகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளை அழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஜோர்டான், எகிப்து, வளைகுடா நாடுகள் ஆகிய நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக பிரான்ஸ் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள் என பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், பாலஸ்தீனப் பிரதமர் முஹம்மது ஷத்தையாவும் மாநாட்டில் கலந்துகொள்வார் என ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மோதலின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அழைப்பு விடுத்தார்.
அத்துடன் ,முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனத்தின் உணவு, தண்ணீர், மருத்துவ உபகரணங்கள், மின்சாரம் மற்றும் எரிபொருள் ஆகியவற்றிற்கான தேவைகளை நிவர்த்தி செய்ய மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் (UNRWA) உயர்மட்ட உதவி அதிகாரியும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் (ICRC) தலைவரும் காசா பகுதியில் உள்ள அவசரத் தேவைகள் குறித்த விவரங்களை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாக இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.
பாரிஸ் ஏற்கனவே 20 மில்லியன் யூரோக்கள் ($21.4 மில்லியன்) மனிதாபிமான உதவியாக பாலஸ்தீனத்திற்கு ஐ.நா மற்றும் பிற பங்காளிகள் மூலம் வழங்கியுள்ளது.
மேலும், மூன்று விமானங்கள் மூலம் 54 டன் நிவாரணப் பொருட்கள் எகிப்துக்கு அனுப்பப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.