காஸாவில் சுரங்கப்பாதையில் சிக்கிய ஹமாஸ் தலைவர்
காஸா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பதுங்கியிருக்கும் சுரங்கப்பாதைகளை தகர்த்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, காஸா பகுதியில் உள்ள சுமார் 130 சுரங்கப்பாதைகளை ராணுவம் ஏற்கனவே தாக்கி தகர்த்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹமாஸ் போராளிகள் தற்போது சுரங்கப்பாதைகளில் பதுங்கியிருப்பதாகவும், சுரங்கப்பாதைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை தயார் செய்துள்ளதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை காஸா பகுதிக்குள் நுழைந்து காஸா நகரை சுற்றிவளைத்துள்ள இஸ்ரேலிய இராணுவம் அங்கு அமைந்துள்ள சுரங்கப்பாதைகளின் நுழைவாயில்களையும் சுற்றிவளைத்துள்ளதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி காஸாவில் ஹமாஸ் அமைப்பின் தலைவராக அறியப்படும் யாஹ்யா சின்வார் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
அவர் வெளியே வர முடியாதவாறு இஸ்ரேல் இராணுவம் சுரங்கப்பாதையை சுற்றி வளைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது பதில் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஹமாஸ் தலைவருக்கு பலம் இல்லை என்றும், அவர் சுரங்கப்பாதையில் தனியாக இருப்பதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், இஸ்ரேலின் இந்தக் கருத்துக்கு ஹமாஸ் இதுவரை பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
காஸா நகரை சூழ்ந்துள்ள இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு அதனுள் நுழைவதற்கு இஸ்ரேல் பிரதமர் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.