சிரியாவின் அவிகாபாத் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்கா!
அமெரிக்காவின் எப்-15 போர் விமானங்கள் சிரியாவின் அவிகாபாத் மீது நேற்று (08.11) மீண்டும் தாக்குதல் நடத்தியது.
ஆயுதக் கிடங்குகள் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிப் படை மற்றும் அது ஆதரிக்கும் குழுக்களால் பயன்படுத்தப்பட்டதாக பென்டகன் கூறியது.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு மத்தியில் மத்திய கிழக்கில் சூடான சூழ்நிலை காரணமாக, ஈரானின் ஆதரவுடன் ஆயுதக் குழுக்கள் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளை அக்டோபர் தொடக்கத்தில் இருந்து நாற்பது முறை தாக்கியுள்ளன.
இவ்வாறான தாக்குதல்களால் 45 அமெரிக்க வீரர்கள் பலத்த அல்லது லேசான காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் அண்மைக்காலமாக அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக F-15 போர் விமானங்களைப் பயன்படுத்தி நேற்று தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.
ஈரான் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் அமெரிக்கப் படைகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 26 அன்று, ஈரானிய புரட்சிகர இராணுவம் மற்றும் அவர்களுடன் இணைந்த ஆயுதக் குழுக்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் இரண்டு சிரிய ஆயுதக் கிடங்குகளை இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் தாக்கி அழித்தமையும் குறிப்பிடத்தக்கது.