இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் – நுவரெலியாவில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்
நுவரெலியாவின் பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இதற்கு எதிராக இன்று நண்பகல் 12.00 மணிக்கு தமது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நேற்று நுவரெலியா தபால் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஒன்றிணைந்த அஞ்சல் முன்னணி தெரிவித்துள்ளது.
நுவரெலியா மற்றும் கண்டி அஞ்சல் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக அஞ்சல் பணியாளர்கள் நேற்று முன்தினம் (08) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய, நேற்று அஞ்சல் பணியாளர்கள் அஞ்சல் நிலையங்களில் கறுப்புக்கொடி ஏற்றி, தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை வரையில் அனைத்து அஞ்சல் பணியாளர்களினதும் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல்மா அதிபர் அறிவித்துள்ளார்.