காற்று மாசுபாட்டால் அலுவலக ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
இந்தியா – டெல்லியில் காற்றின் தரக்குறியீடு (AQI) தொடர்ந்து நான்காவது நாளாக ‘கடுமையான’ நிலையில் உள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் அதனை அண்மித்த மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக நச்சுக்காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் வளிமாசடைவு முதன் முறையாக இந்த பருவத்தில் கடுமையான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, வளிமாசடைவு காரணமாக டெல்லியில் உள்ள அனைத்து ஆரம்ப பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்து பின்னர் தீர்மானம் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ள நிலையில், அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 வீத ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் வளிமாசடைவை கருத்தில் கொண்டு கலந்துரையாடல்களை முன்னெடுக்கும் வகையில் சுற்றுச்சுழல் அமைச்சினால் அனைத்து துறையினருக்கும் நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.