விகாரமஹாதேவி பூங்காவின் உரிமை மாறுகிறது
விகாரமஹாதேவி பூங்காவை கொழும்பு மாநகர சபைக்கு வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 50வது பிரிவின்படி, அபிவிருத்தி நோக்கத்திற்காக எந்தவொரு சொத்தையும் கையகப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரம் உள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி புனரமைப்பு பணிகளுக்காக இவ்வாறு கையகப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட சொத்துக்களை மீண்டும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் இந்த பூங்கா நவீனமயப்படுத்தப்பட்டது.
இதன்படி கொழும்பு மாநகர சபையின் கீழ் இருந்த விகாரமகா தேவி பூங்கா 2011 ஆம் ஆண்டு புனரமைப்புக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டது.
உலக வங்கியின் உதவியுடன் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமுல்படுத்தப்பட்ட கொழும்பு பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட விகாரமஹா தேவி பூங்கா 2013 இல் மீண்டும் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.