அமெரிக்காவில் அதிகரித்து வரும் சட்டவிரோத இந்திய குடிபெயர்வாளர்களின் எண்ணிக்கை
அமெரிக்காவில் குடிபெயர்வதற்காக சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இது தொடர்பாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு மற்றும் சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 2022 அக்டோபர் முதல் 2023 செப்டம்பர் வரை அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்கள் பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 30,010 பேர் கனடா எல்லை வழியாகவும், 41,770 பேர் மெக்சிகோ எல்லை வழியாகவும் அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.மற்றவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு அதிகாரிகளிடம் பிடிபட்டுள்ளதாகவும் பிடிபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-20 காலகட்டத்தில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றபோது பிடிப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 5 மடங்காக அதிகரித்துள்ளது.
அதே சமயம் அதிகாரிகளிடம் பிடிபடாமல் அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்றும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.