கண்டி – தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடு செய்த இந்திய நிதி அமைச்சர்
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (01) காலை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமான UL 192 இல் புதுடெல்லியிலிருந்து இலஙகை வந்தடைந்தார்.
நிதி அமைச்சருடன், இந்திய நிதியமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரை நீர் வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.
அதனையடுத்து, கண்டிக்கு சென்ற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அஸ்கிரிய தரப்பு மகாநாயக்கர் வணக்கத்திற்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரதன் அவர்களைச் சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுமுகமான உறவைப் பாராட்டிய அஸ்கிரி மகா பீடாதிபதி, இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவிடம் இருந்து கிடைத்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய மின்கலங்களை வழங்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்திடப்பட உள்ளதாக இந்திய நிதியமைச்சர் நினைவு கூர்ந்தார்.
பின்னர் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டி மல்வத்து மகா விகாரையில் உள்ள மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து மல்வத்து மகாநாயக்கர் ஸ்ரீ சுமங்கல நஹிமி அவர்களை சந்தித்து ஒரு குறுகிய சந்திப்பை நடத்தினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை இலங்கைக்கு பெற்றுக்கொடுக்க இந்திய அரசாங்கம் வழங்கிய ஆதரவைப் பாராட்டுவதாக மல்வத்து பீடாதிபதி தெரிவித்தார்.
அதன்பின், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தூதுக்குழுவினர் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு வந்து பிரார்த்தனை செய்து ஆசி பெற்றனர்.
இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்ததன் 200வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாளை சுகததாச மைதானத்தில் நடைபெற உள்ள NAAM 200 நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தின் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ள சீதாராமன் யாழ்ப்பாணப் பகுதிக்கும் விஜயம் செய்யவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.