பேர்சி அபேசேகர காலமானார்
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பல வருடங்களாக ஆதரவாளராக இருந்தவரும், உலகம் அறிந்தவரும், நாட்டின் பிரபல்யமான மற்றும் விருப்பமான கிரிக்கெட் சியர்லீடருமான பேர்சி அபேசேகர இன்று காலமானார்.
ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு மத்தியில், கையில் சிங்கக் கொடியுடன் இலங்கை அணியை பேர்சி அபேசேகர உற்சாகப்படுத்தினார்.
வெற்றி தோல்வி இரண்டிலும் இலங்கை அணிக்கும் இலங்கை ரசிகர்களுக்கும் துணை நிற்கும் பணிக்காக உலகப் புகழ்பெற்ற வீரர்களாலும் விரும்பப்பட்டு மதிக்கப்பட்டவர்.
அவர் சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், சமீபத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய மற்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் தற்போதைய வீரர்கள் சிலர் அவரது வீட்டிற்குச் சென்று நலம் விசாரித்தபோது ரசிகர்கள் அவரை மீண்டும் பார்க்க முடிந்தது.
சுகயீனம் காரணமாக ராகம தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பேர்சி அபேசேகர, மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமானார்.
1936ஆம் ஆண்டு காலி புஸ்ஸா கிராமத்தில் பிறந்த பேர்சி அபேசேகர இறக்கும் போது அவருக்கு வயது 88.
பேர்சி அபேசேகரவின் இறுதிக் கிரியைகள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.