கன்னட பிக் பாஸ் போட்டியாளர் ஜாமீனில் விடுதலை
பிக் பாஸ் கன்னட 10 போட்டியாளர் வர்த்தூர் சந்தோஷ், ரியாலிட்டி ஷோ நடந்து கொண்டிருந்த வீட்டிற்குள் புலி நகம் பதக்கத்தை அணிந்திருந்ததற்காக கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் கர்நாடகத்தில் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த வர்த்தூர் சந்தோஷ் தனக்கு ஜாமீன் வழங்க கோரி பெங்களூருவில் உள்ள 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நேற்று கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது நீதிபதி இருதரப்பு வாதங்களையும் கேட்டார்.
பின்னர் நீதிபதி, வர்த்தூர் சந்தோசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க, அவருக்கு ரூ.4 ஆயிரத்திற்கான ஒரு நபர் உத்தரவாத பத்திரத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க அறிவுறுத்தினார்.
அதன்படி உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து வர்த்தூர் சந்தோசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் வர்த்தூர் சந்தோஷ், நேற்று இரவு 7 மணி அளவில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு குடும்பத்தினர், நண்பர்கள் உள்பட ஏராளமானோர் சிறை வாசலில் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வர்த்தூர் சந்தோசிற்கு மாலை, தலைப்பாகை, சால்வை அணிவிக்கப்பட்டது.