அணு ஆயுத ஒத்திகையில் ஈடுபட்டு வரும் ரஷ்யா;அதிர்ச்சியில் உலக நாடுகள்!
அணு ஆயுத ஒத்திகையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்ததை அடுத்து, உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
உக்ரைன் மற்றும் பாலஸ்தீன காசா ஆகியவற்றை முன்வைத்து போர்கள் நடந்து வரும் சூழலில், அணு ஆயுத ஒத்திகையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்திருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது இன்னொரு உலகப்போருக்கான சாத்தியங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.அணு ஆயுத சோதனை தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்த சில மணி நேரங்களில் இந்த சோதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. மேலும் அமெரிக்காவுக்கான எதிர்ப்பு, சீன அதிபருடனான சந்திப்பு ஆகியவற்றைத் தொடர்ந்தே, அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதும் உலக நாடுகள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்த தகவலின்படி தரை, வான், நீர் என 3 தளங்களில் இருந்தும் அணு ஆயுத ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டன. அதிலும், நீர் மூழ்கி கப்பலில் இருந்தபடி இலக்கை தாக்கும் ரஷ்யாவின் குறி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகையின் போது பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகள் வெற்றிகரமாக ஏவப்பட்டன. கண்டம் விட்டு கண்டம் பாயும் யார்ஸ் ஏவுகணை தூர கிழக்கு ரஷ்யாவின் சோதனை தளத்தில் இருந்து ஏவப்பட்டது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை ஏவப்பட்டது. டியு-95எம்எஸ் என்னும் நீண்ட தூர ஏவுகணைகள் பறக்கும் விமானங்களில் இருந்து ஏவப்பட்டன.
இந்த அணு ஆயுத ஒத்திகை நடவடிக்கைகள் அனைத்தையும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மேற்பார்வையிட்டதாகவும் கிரெம்ளின் தெரிவித்துள்ளது. அணு ஆயுத பரிசோதனைகள் தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு, அதிபர் விளாதிமிர் புடின் உடன் ஆலோசனை மேற்கொள்வதை அரசு தொலைக்காட்சிகள் வெளியுலகுக்கு காட்டின.உக்ரைன் மீதான போர் நடவடிக்கை ஓராண்டை எட்டியது முதலே, அணு குண்டு வீசுவோ என ரஷ்யா அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. அடுத்த கட்டமாக அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு, அணு ஆயுத ஒத்திகையையும் வெற்றிகரமாக முடித்திருப்பதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.