ChatGPTயின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்
கடந்த ஓராண்டாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த விஷயங்களில் ChatGPT-யும் ஒன்று.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் லட்சக்கணக்கான நபர்கள் வேலை இழக்கக்கூடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனத்தின் Bard என்ற செயற்கை நுண்ணறிவு கருவி வெளியிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து மேலும் பல நிறுவனங்கள் இமேஜ், வீடியோ, ஆடியோ, டிசைன் என பல AI டூல்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ChatGPT-க்கு தொடக்கத்தில் இருந்த வரவேற்பு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. தொடக்கத்தில் இந்த தொழில்நுட்பத்தால் மிகப்பெரிய தாக்கம் உண்டாகும் என்றெல்லாம் கருதப்பட்டது. ஆனால் இதன் பயன்பாடு தற்போது முற்றிலும் குறைந்து விட்டதால், இது காலப்போக்கில் இல்லாமல் கூட போகலாம் என ஆய்வு நிறுவனம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.
என்னதான் ஒரு காலத்தில் செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி விடும் என மக்கள் பயத்தில் இருந்தாலும், இப்போது அந்த அச்சம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. மக்கள் நினைத்தபடி மிகப்பெரிய தாக்கத்தை இதனால் ஏற்படுத்த முடியவில்லை என்றே கூறலாம். உலகின் பல முன்னணி நிறுவனங்கள் அவர்களுக்கான ஏஐ கருவியை அறிமுகம் செய்து வந்தாலும், அதற்கு தொடக்கத்தில் மட்டுமே வரவேற்பு கிடைக்கிறது. காலப்போக்கில் அதன் பயன்பாடு குறைந்து விடுவதால், 2024 ஆம் ஆண்டு முடிவதற்குள் செயற்கை நுண்ணறிவு மீதான ஈர்ப்பு வெகுவாகக் குறைந்துவிடும் எனக் கூறப்படுகிறது.
இது சார்ந்து வெளியான அறிக்கை ஒன்றில், எல்லா நிறுவனங்களின் ஜெனரேட்டிவ் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளும், பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை வழங்கும்படிதான் உருவாக்கப்பட்டுள்ளது. சாதாரண மென்பொருள் மற்றும் அப்ளிகேஷனை இயக்குவதற்கு அதிக ஆற்றல்கள் கொண்ட சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஜெனரேட்டிவ் மாடலைப் பொறுத்தவரை மேம்படுத்தப்பட்ட கிராபிக்ஸ் யூனிட்களின் பயன்பாடு தேவைப்படுகிறது. எனவே இதை இயக்குவதற்கு அதிகப்படியான ஆற்றலும் பொருட்செலவும் தேவை என்பதால், ஏஐ நிறுவனங் களுக்கு தங்களுக்கு கிடைக்கும் வருவாயை விட செலவு அதிகம் ஆகிறது.
தற்போது கூகுள், மெட்டா, அமேசான் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்கள் தங்களுக்கே பிரத்தியேகமான சிப்களை உருவாக்கி அதில் தங்களின் கருவிகளை இயக்கி வந்தாலும், இதற்கு ஆகும் செலவு மிகவும் அதிகம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதேவேளையில் செயற்கை நுண்ணறிவு மீதான ஈர்ப்பு மக்களுக்கு வெகுவாக குறைந்துவிட்டதால், அவர்களுக்கு இது மேலும் நஷ்டத்தையே ஏற்படுத்தும்.
எனவே, எதிர்காலத்தில் இத்தகைய AI டூல்கள் இல்லாமலே கூட போகலாம்.
நன்றி – கல்கி