லூசியானாவில் கடும் பனிப்பொழிவு… அடுத்தடுத்து மோதிய 150 வாகனங்கள்; 7 பேர் பலி!
அமெரிக்காவின் லூசியானாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 150 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெற்கு சதுப்பு நிலங்களில் ஏற்பட்ட தொடர் தீயினால், புகை மூட்டத்துடன் அடர்ந்த பனிமூட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. இந்நிலையில் லூசியானா மாகாணத்தில் சாலைகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் சாலைப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நியூ ஆர்லியன்ஸ் அருகே கடுமையான மூடுபனி காரணமாக அம்மாநிலத்தில் உள்ள ஐ55 நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 25 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இதேபோல் இன்ட்ரஸ்டேட் 55-ல் 158 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில், படுகாயம் அடைந்த 25க்கும் மேற்பட்டோர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே ரத்த தானம் செய்பவர்களுக்கு மாகாண ஆளுநர் ஜான் பெல் எட்வர்ட்சால் அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னால் சென்ற வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவும், புகை மூட்டமும் நிலவியதே இந்த விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே சாலைகளில் பயணிப்போர் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என அம்மாகாண அரசு எச்சரித்துள்ளது.