சீன அதிபரின் எட்டு அம்சக் கொள்கை – புடின் உள்ளிட்டவர்கள் பாராட்டு
இலங்கை உள்ளிட்ட நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கு சலுகைக் கடன் வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சீனாவின் பெய்ஜிங் நகரில் இன்று (18) ஆரம்பமான “ஒரே பெல்ட் – ஒரே பாதை” சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் சுமார் 20 நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் சுமார் 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்குபற்றுதலுடன் மக்கள் மாளிகையில் மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் “ஒரே பெல்ட் – ஒரே பாதை” திட்டத்திற்கு அடிப்படையாக இருக்கும் எட்டு அம்சக் கொள்கைகளையும் சீன ஜனாதிபதி வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த சீன அதிபர் ஜி ஜிங்பிங், திறந்த உலக பொருளாதாரத்தை சீனா ஆதரிப்பதாகவும், உற்பத்தி துறையில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்கும் என்றும் கூறினார்.
இங்கு பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபரின் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை நியாயமான, பன்முனை உலகத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.