நோபல் பரிசு வென்ற பிரபல பெண் கவிஞர் திடீர் மரணம்…
நோபல் பரிசு, புலிட்சர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்ற அமெரிக்காவின் பிரபல பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளது இலக்கிய உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக். தன்னுடைய கவித்துவமான, தனித்துவமான படைப்புகள் காரணமாக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். புலிட்சர் விருது, அமெரிக்காவின் புத்தக விருது, புத்தக விமர்சனங்கள் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.
அமெரிக்க நாட்டின் அரசவை கவிஞராகவும் இருந்தவர். இவரின் இலக்கிய சேவையை பாராட்டி கடந்த 2020-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. நாட்டில் உள்ள பெரும்பாலான இலக்கிய விருதுகளுக்கு சொந்தகாரர். லூயிஸ் க்ளுக் மாசாசூட்ஸ் மாகாணம் கேம்பிரிட்ஜில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் புற்றுநோய் காரணமாக அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 80. சிலமாதங்களுக்கு முன்பு தன் உடலில் புற்றுநோய்க்கான அறிகுறிகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருடைய படைப்புகள் பெரும்பாலும் தத்துவங்கள், கசப்பான நினைவுகள், மரபுசார் குறிப்புகள், சமகால நிகழ்வுகள், டார்க்-காமெடி ஆகியவற்றை கொண்டது.
நன்கொடையாளரும், மனிதநேயம் மிகுந்தவரும், ஆசிரியருமான லூயிஸ் க்ளுக்கின் மரணம் இலக்கியவாதிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.