பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை பிரபாகரனையே சாரும் – ரவிகரன்
பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முதல் பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றையதினம் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்து காெண்டு கருத்து தெரிவித்தார்.
இளைஞர்களுக்குரிய மதிப்பும், மரியாதையும் சரியாக கிடைக்காததனாலையே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த இளைஞர்களின் போராட்டத்தை அரசாங்கம் அங்கீகரித்ததனாலையே பேச்சுவார்த்தைக்கு பல நாடுகளுக்கு அழைத்தார்கள் ஆனால் அந்த இளைஞர்கள் ஒரே குறிக்கோளோடு எங்களுக்கு நியாயமான ஒரு தீர்வுக்காகத்தான் போராடினார்கள்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கிடைக்காததனால் அந்த பேச்சுவார்த்தைகள் முறியடிக்கப்பட்டன. ஈற்றிலே தனியாக போராட முடியாது,
ஸ்ரீலங்கா அரச படைகளால் விடுதலை புலிகளோடு போரிட முடியாது என்ற காரணத்தால் பல நாடுகள் சேர்ந்து இவர்களின் தியாகத்தை மௌனிக்கச் செய்து விட்டது. இருந்தாலும் இந்த உணர்வுகள் எம் மக்களிடத்தே அதிகமாக இருக்கி்றது.
இலங்கை அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனியாக இந்த நினைவுகூரலை செய்த நிலையும் இருக்கின்றது. எல்லோருக்கும் நினைவுகூர விருப்பம் இருக்கின்றது.
ஆனால் முன்பு இருந்த அடக்குமுறைகள் மக்கள் மீது இப்போது திணிக்கப்படுகின்றது. நிச்சயமாக புலனாய்வாளர்கள் என்ற பெயரிலும் , பொலிஸ், இராணுவம் என ஏதோ ஒரு வகையில் பலருக்கும் அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றது.
அதனாலே மக்கள் ஒன்று கூடுவதில்லையே தவிர இவர்களின் நினைவோடுதான் பயணிக்கிறார்கள்.
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டத்திலே பல இடங்களில் நடந்தது. அவர்களை எண்ணிப்பார்த்தால் பெரிய கூட்டமாகத்தான் இருக்கும்.
மாலதி முதலாவது பெண் மாவீரர் இவர் மரணித்த நாளை நினைவு நாளாக நினைவு கூருகின்றோம். பெண்களில் தலைசிறந்த வீராங்கனையாக , அரசியல் துறையிலே தலை நிமிர்ந்து பயணிக்க கூடியவர்களாக, போராட்டக்களத்திலே துணிந்து பயணிக்க கூடியவர்களாக, பெண்களின் திறமைகளை வெளிக்காட்டிய பெருமை தலைவர் பிரபாகரனையே சாரும்.
மன்னார் மாவட்டத்தை சேர்ந்த முதல் பெண் மாவீரர் 36 ஆண்டுகளாக நினைவு கூரப்படுகின்றது.
விடுதலைபுலிகளின் தியாகத்தை நாம் மறக்கவில்லை. என்றோ ஒரு நாள் மாவீரர்களின் கனவுகள் நிறைவேறும். அந்நாளில் தனித் தமிழ் ஈழத்தில் நாங்கள் செயற்படும் நிலை ஏற்படும் என மேலும் தெரிவித்தார்