1.7 மில்லியன் ஆப்கானியர்களை வெளியேற பாகிஸ்தான் உத்தரவு
அனைத்து ஆவணமற்ற குடியேற்றவாசிகளையும், முக்கியமாக ஏறக்குறைய 1.73 மில்லியன் ஆப்கானிஸ்தான் பிரஜைகள், தானாக முன்வந்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நாடு கடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது.
“நாங்கள் அவர்களுக்கு நவம்பர் 1 காலக்கெடுவை வழங்கியுள்ளோம்,” என்று உள்துறை அமைச்சர் சர்ஃப்ராஸ் புக்டி இஸ்லாமாபாத்தின் கூற்றுகளுக்கு மத்தியில் தெரிவித்தார்,
மேலும் இந்த ஆண்டு நாட்டில் 24 தற்கொலை குண்டுவெடிப்புகளில் 14 ஆப்கானிஸ்தான் பிரஜைகளால் நடத்தப்பட்டது என்று கூறினார்.
பாகிஸ்தானில் உள்ள 1.73 மில்லியன் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் தங்குவதற்கு சட்டப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இல்லை என்றும், மொத்தம் 4.4 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் வாழ்கின்றனர் என்றும் புக்டி கூறினார்.
“ஆப்கானிஸ்தானுக்குள் இருந்து நாங்கள் தாக்கப்படுகிறோம், ஆப்கானிஸ்தான் பிரஜைகள் எங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதில் இரண்டு கருத்துக்கள் இல்லை,” என்று அவர் கூறினார்.
1979ல் சோவியத் படையெடுப்பிற்குப் பிறகு இஸ்லாமாபாத் ஆப்கானிஸ்தான் அகதிகளின் மிகப்பெரும் வருகையைப் பெற்றுள்ளது.
சுமார் 1.3 மில்லியன் ஆப்கானியர்கள் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட அகதிகளாக உள்ளனர், மேலும் 880,000 பேர் சட்டப்பூர்வ அந்தஸ்தைப் பெற்றுள்ளனர் என்று சமீபத்திய ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.