வாச்சாத்தி வன்கொடுமை: 215 பேருக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
இந்தியாவின் வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், 215 பேர் குற்றவாளிகள் என தருமபுரி மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ அளித்த ஊடகப் பேட்டியில், “கடந்த 1992-ல் நடந்த வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் மேல் முறையீட்டு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து தருமபுரி நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு ரூ.10 இலட்சம் நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதில் ரூ.5 இலட்சம் அரசாங்கமும், ரூ 5. இலட்சம் பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து வசூலித்தும் தர வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட 269 பேரில், உயிருடன் இருந்த 215 பேர் குற்றவாளிகள் என்று கடந்த 2011ஆம் ஆண்டு தருமபுரி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது
அதில், 12 பேருக்கு 10 ஆண்டு சிறை, 5 பேருக்கு 7 ஆண்டு சிறை, மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.