எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: அமெரிக்கா,பிரிட்டன் மீது ரஷ்யா திடீர் குற்றச்சாட்டு
ஜேர்மனியையும் ரஷ்யாவையும் இணைக்கும் எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இருப்பதாக திடீரென ரஷ்ய தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.
New York Times பத்திரிகை, ஜேர்மனிக்கு ரஷ்யா எரிவாயு வழங்கிவந்த Nord Stream எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில், புடினுடைய எதிரிகள் இருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக, முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.
அது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு சதிச்செயல் என்று கூறப்பட்ட நிலையில், உக்ரைன் ஆதரவு அமைப்பு ஒன்று Nord Stream எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக அந்த பத்திரிகை தெரிவித்திருந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு உக்ரைன் தரப்பு மறுப்பும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது, திடீரென பிரித்தானியா மற்றும் அமெரிக்கா மீது ரஷ்யா பழியைப் போட்டுள்ளது. பால்டிக் கடலுக்கடியில் செல்லும் எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பால்டிக் கடலுக்கடியில் செல்லும் எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இருப்பதாகவும், அது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.ஆனால், அது தொடர்பான எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.