இலங்கை பெண்களை விபச்சாரத்திற்கு விற்பனை செய்த மோசடி சிக்கியது
ஓய்வு பெற்ற இராணுவ பெண் சிப்பாய் ஒருவரை சுற்றுலா விசாவில் டுபாய்க்கு விபச்சாரத்திற்காக அனுப்பிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனித கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றவியல் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஓய்வு பெற்ற இராணுவ பெண் சிப்பாய் இரண்டு சந்தர்ப்பங்களில் விபச்சார விடுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அநுராதபுரத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ பெண் சிப்பாய், தங்க நகைகள் முச்சக்கரவண்டி உள்ளிட்டவற்றை அடகு வைத்து 5 இலட்சம் ரூபாவை வழங்கி கடந்த வருடம் ஜூன் மாதம் டுபாய் சென்றிருந்தார்.
தம்புத்தேகமவில் வசிக்கும் பெண் ஒருவரின் ஊடாக இவ்வாறு அவர் சுற்றுலா விசாவின் அடிப்படையில் அங்கு சென்றிருந்தார்.
அதன்படி, சட்டவிரோதமாக வெளிநாடு சென்ற குறித்த பெண்ணை டுபாயில் உள்ள முகவர் இரண்டு தடவைகள் விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் தப்பி ஓடிய பெண் துபாயில் தங்கியிருக்கும் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு முகவருக்குத் தெரிவித்ததையடுத்து, அவரை இலங்கைக்கு அனுப்ப 4 இலட்சம் ரூபா பணம் கேட்டுள்ளார்.
பின்னர், அந்தத் தொகை வழங்கப்பட்டதால் அவர் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதன்படி, இராணுவத் தளபதி ஊடாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனையடுத்து, குறித்த ஓய்வுபெற்ற இராணுவ பெண் சிப்பாயை டுபாய்க்கு அனுப்பிய இலங்கை பிரதிநிதியான பெண் தம்புத்தேகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேநேரம் டுபாயில் தங்கியிருந்து மனித கடத்தலில் ஈடுபட்டு வரும் சந்தேக நபரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.