தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நீடிப்பு!
தேர்தல் செலவுகள் தொடர்பான சட்டமூலத்தின்படி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை 21 நாட்களில் இருந்து 42 நாட்களாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடியியல் வழக்கு நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைக்கான திருத்தம் மற்றும் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் நீதி மற்றும் சட்டம் மீதான துறைசார் மேற்பார்வை குழுவில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேர்தல் சட்டமூலங்களால் நிர்ணயிக்கப்பட்ட அபராதத் தொகை போதுமானதாக இல்லாததால், தற்போதைய நிலைமைக்கு உரியவாறு அபராதத் தொகையை புதுப்பிக்கவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் சட்டமூலத்தின் மூலம், 2023 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு அமைய, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் தேர்தல் மனு தாக்கல் செய்வதற்கான நேரத்தை 42 நாட்களாக மாற்றப்பட்டுள்ளதாக குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் அல்லது வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 21 நாட்களுக்குள் தேர்தல் செலவுகளை சமர்ப்பிக்க வேண்டும், தவறினால் தேர்தல் மனு தாக்கல் செய்யலாம் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக புதிய திருத்தத்தின் மூலம் கால அவகாசம் 42 நாட்களாக மாற்றியமைக்கப்படும் எனவும் மேலும், இந்த சட்டமூலம் தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்றவாறு அபராதத் தொகையை திருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், சிவில் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 205 இன் படி, தீர்ப்பின் சான்றளிக்கப்பட்ட நகல்களை வழங்குதல் மற்றும் நடவடிக்கைகளின் தீர்ப்பு தொடர்பாக திருத்தங்கள் குறித்த குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, தீர்ப்பின் ஒரு சான்றளிக்கப்பட்ட நகல் அல்லது தீர்ப்பின் அறிக்கையை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கட்டணத்தைச் செலுத்துவது தொடர்பான நகல்களைப் பெறுவதற்கான திருத்தங்களும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்படுகிறது.