ஜனாதிபதி தேர்தலுக்காக மகிந்தவுடன் கூட்டு சேரும் ரணில்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியவை அடுத்த தேர்தலுக்கு முன்னர் ஒரு பரந்த கூட்டணியை அமைக்க வாய்ப்புள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், நாட்டை ஆள்வதற்கான பொதுவான கொள்கை கட்டமைப்பை ஏற்றுக்கொள்ள முயற்சிப்பதும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பெரும்பான்மை உடன்பாடு உள்ளதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், வரும் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து வெற்றி பெறுவதுதான் ஒரே வழி என்பதை இரு கட்சிகளும் உணர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) உள்ள பல முன்னாள் ஐ.தே.க எம்.பி.க்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்,
மேலும் மொட்டு கட்சியில் உள்ள பேரம்பேசுபவர்கள் எதிர்க்கட்சி மற்றும் சுயேச்சைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்கனவே இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டால் என்ன பங்கு வகிக்கப் போகின்றார் என்பது இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செல்வாக்கு வெகுவாக வீழ்ச்சியடைந்ததுடன், அந்த அரசாங்கத்தையும் அதன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் பொதுப் போராட்டத்தின் மூலம் பதவியிலிருந்து அகற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் பின்னர், பாராளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார், அதற்காக அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவைப் பெற்றார்.