இலங்கையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிணையில் விடுதலை!
குருந்தூர்மலை விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோருக்கு நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (14.09) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகி கடந்த வழக்கில் முன்னிலையாகும் அறிவித்தல் தமக்கு கிடைத்திருக்கவில்லையென தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவரை பிணையில் செல்ல அனுமதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், வழக்கினை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.
வழிபாட்டு உரிமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக குறித்த விகாரையின் விகாராதிபதி கல்கமுவ சுமேத தேரர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் வினோநோகராதலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் க.சிவநேசன், து.ரவிகரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.