கேரளாவை அச்சுறுத்தி வரும் நிபா வைரஸ் – இருவர் பலி!
இந்தியாவின் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்து உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் 4 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 9 வயது சிறுவன், 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் 75 பேர் உள்ளனர். 130 பேர் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளனர்.
நிபா வைரஸால் மூளை செல்கள் அழிந்து, உமிழ்நீருடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களிடையே பரவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்நோய் தாக்கிய பன்றிகள் மற்றும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக கூறப்படும் நிலையில் ,அதற்கான சிகிச்சை இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, கேரள சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர். நோய் பரவலை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.