சுகாதார அமைச்சர் போலியான மருந்துகள் இறக்குமதி செய்து தனது பொக்கட்டுக்களை நிறப்பி உள்ளார்-செல்வம் அடைக்கலநாதன் MP
மக்களுடைய வாழ்க்கையுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தற்போதைய சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு,இளமையான புதிய ஒருவர் சுகாதார அமைச்சராக நியமிக்கும் பட்சத்திலேயே இந்த பிரச்சனைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது நாட்டை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.இதனால் எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.வடமாகாணத்தை பொறுத்தவரையில் தலைமை தாங்குகின்ற வைத்தியர்கள் தமது பிரச்சினைகளை வெளியே கூறி உள்ளனர்.
அவர்கள் விடா முயற்சியுடன் செயல் பாட்டாலும் கூட நிலவுகின்ற வைத்திய பற்றாக்குறையை ஈடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்தும் அரச வைத்தியசாலைகளில் வழங்கப்படுகின்ற மாத்திரைகள் போலியானதாக உள்ளதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகிறது.
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல போலியான மருந்துகள் இறக்குமதி செய்து அந்த பணத்தை தனது பொக்கட்டுக்களை நிறப்பி உள்ளார்.அதனடிப்படையில் ஒட்டுமொத்த நாடுகளையும் சுகாதார அமைச்சர் ஏமாற்றியது மட்டுமின்றி இதற்கு ஆதரவாக வாக்களித்தவர்களும் ஒட்டுமொத்த நாட்டையும் மக்களையும் ஏமாற்றி உள்ளனர்.இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு எழ வேண்டுமாக இருந்தால் சுகாதார அமைச்சர் மாற்றப்பட வேண்டும்.
அவர் வெற்றி பெற்று விட்டார் என்ற எண்ணத்துடன் இருக்க முடியாது.அரசை காப்பாற்றுவதற்காக அவரை வெற்றி பெற செய்துள்ளனர்.அவற்ற மாற்றப்பட வேண்டும்.அல்லது அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.மக்களினுடைய வாழ்வு பிரச்சினையாக அமைந்துள்ளது.உயிர் சம்பந்தமான பிரச்சனை. இதில் விளையாட முடியாது.எனவே ஜனாதிபதி இவ்விடயத்தில் கவனம் செலுத்தி இவ்வாறானவர்களை வெளியேற்றி சுகாதார துறைக்கு நல்ல இளமையானவர்கள் அமைச்சராக நியமித்து ஏற்பட்டுள்ள பிரச்சினையை மீட்டெடுக்க துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் மன்னாரில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த காவல்துறை துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.மன்னார் நொச்சிக்குளத்தில் கடந்த வருடம் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து நொச்சிக்குளம் கிராம மக்களிடையே அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது.அந்த மக்கள் நிம்மதி இன்றி தவிக்கின்றனர்.மன்னாரில் உள்ள ரவுடி கும்பல் ஒன்று குறித்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.இதனால் ஒரு கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.இது தொடர்பாக மக்களுக்கு பொறுப்பான குறிப்பாக பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சருடன் கதைக்க உள்ளோம்.இச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.