225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும் என்று மக்கள் நினைப்பது நியாயமானதே!
நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாப்பதில் மட்டும் ஈடுபடும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிய வேண்டும் என மக்கள் நினைப்பது நியாயமானதே என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் இன்றை (06.09) அமர்வில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், சுகாதார அமைச்சருக்கும், தமக்கம் தனிப்பட்ட முரண்பாடுகள் கிடையாது எனவும், சுகாதாரத்துறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண்பதில் அமைச்சர் தோல்விக் கண்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரமற்ற மருந்து கொள்வனவு, மருத்துவ நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை சுட்டிக்காட்டிய அவர், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும் என மக்கள் குறிப்பிடுவது நியாயமானதே எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம். ஆனால் தோற்றகடிக்கப்படுவது நம்பிக்கையில்லா பிரேரணை மட்டுமல்ல. மக்களின் எதிர்பார்ப்பும் தான் என்பதை ஆளும் தரப்பினர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.