புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்கவை நியமிக்க நடவடிக்கை
இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்கவை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
எனினும் அதற்கு முன்னதாக சஞ்சய் வனசிங்க ஓய்வு பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது பணிக்காலம் அக்டோபர் 13 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.
எவ்வாறாயினும், சஞ்சய் வனசிங்கவின் சேவைக் காலத்தை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இராணுவத் தளபதி விக்கும் லியனகே ஓய்வு பெற்றதன் பின்னர், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க இலங்கை இராணுவத்தின் தலைமை அதிகாரியாகவும் கடமையாற்றி வருகின்றார்.
இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்க இராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்டாக நியமிக்கப்பட்டார்.
அவர் இராணுவத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் பதவி, 59 வது பிரிவின் கர்னல் தலைமை தளபதி பதவி, 682 மற்றும் 144 வது படையணிகளின் படைத் தளபதிவிகளையும் வகித்துள்ளார்.
மேஜர் ஜெனரல் சஞ்சய் வனசிங்கவின் தந்தை, ஜெனரல் ஹமில்டன் வனசிங்க1988 முதல் 1991 வரை இலங்கை இராணுவத்தின் 11வது இராணுவத் தளபதியாக கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.