மத ஸ்தலங்கள் மற்றும் தொல்பொருள் இடங்களை பாதுகாக்க விசேட திட்டம்!! ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் தொல்பொருள் இடங்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மல்வத்து – அஸ்கிரிய பீடாதிபதிகளை நேரில் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்காண் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களின் சமயப் பிரச்சினைகள் குறித்து ஆராய அந்தந்த மாகாணங்களின் மதத் தலைவர்களின் தலைமையில் குழுக்கள் ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இக்கட்டான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் பாரிய பங்களிப்பை ஆற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு சகலரது ஆதரவும் இருக்க வேண்டும் என அஸ்கிரிய பீட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
துரதிஷ்டவசமான தலைவிதியை எதிர்கொண்ட இலங்கையை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதியின் முயற்சிகளை சிலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது எனவும், நாட்டுக்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு மகாசங்கரத்தினரின் ஆசிர்வாதம் நிச்சயம் கிடைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்டி வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் மல்வத்து மகாநாயக்க தேரர் திப்பட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரரை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதன் பின்னர், அஸ்கிரிய மகா விகாரைக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அஸ்கிரிய தரப்பு மகா பெரியவர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன நஹிமி அவர்களின் ஆசிகளை பெற்றுக்கொண்டார்.