சீன கப்பலுக்கு இலங்கை அனுமதி!! இந்தியா கடும் அதிருப்தி
சீனாவுக்கு சொந்தமான ஷி யான் 6 என்ற கப்பலுக்கு நாட்டிற்குள் நுழைய இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இலங்கையின் கடல் வலயத்துக்குள் பிரவேசிப்பதற்கு குறித்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் நவம்பர் 10ஆம் திகதி வரை இந்தக் கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த காலப்பகுதியில் கொழும்பு துறைமுகம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் கப்பல் வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கப்பல் எனக் கூறப்படும் Xi Yan 6 கப்பல் தொடர்பாக தற்போது சர்ச்சைக்குரிய சூழல் ஏற்பட்டுள்ளது.
குறித்த கப்பலை இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுமா என்பது தொடர்பில் இந்தியா உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ள பின்னணியிலேயே இது அமைந்துள்ளது.
எவ்வாறாயினும், சீனக் கப்பல் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்திய அதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக சீனாவைச் சேர்ந்த யுவான் வாங் 5 என்ற ஆய்வுக் கப்பலும் இலங்கைக்கு வந்திருந்த நிலையில் அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.