ஜப்பானை நெருங்கும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை
ஜப்பானில் வலுவாக வீசக்கூடிய சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகும்படி நாட்டு மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய தினம் நாட்டின் முக்கியத் தீவான ஹொன்ஷுவில் (Honshu) ‘லான்’ சூறாவளி கரையைக் கடக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இதனால் கனத்த மழையும் பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வகம் கணித்துள்ளது.
சில இடங்களில் 24 மணி நேரத்துக்குள் 50 சென்ட்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யக்கூடும் என்று ஆய்வகம் கூறியது. குறைந்த வேகத்தில் வீசக்கூடிய அந்தச் சூறாவளி நீண்ட நேரம் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று அது தெரிவித்தது.
சில இடங்களில், இம்மாதத்தில் (ஆகஸ்ட்) சராசரியாக ஒரு மாதத்துக்குப் பெய்யும் மழை ஒரே நாளில் பெய்யலாம் என்றும் ஆய்வகம் சொன்னது.
ஜப்பானில் ஓபோன் (“obon”) பாரம்பரிய விழாவை முன்னிட்டு மில்லியன் கணக்கான மக்கள் தத்தம் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் நிலையில் ‘லான்’ சூறாவளி அந்த நாட்டை நெருங்குகிறது.
இதனால் பயணத் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு தேசிய தொலைக்காட்சி நிறுவனம் மக்களை அறிவுறுத்தி வருகிறது.
சூறாவளி கரையைக் கடக்கும்வரை விமான, ரயில் போக்குவரத்துச் சேவைகள் ரத்துச் செய்யப்படலாம் அல்லது தாமதம் அடையலாம் என்று கூறப்பட்டுள்ளது.