பண்டிகைக் காலத்தில் நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்
தமிழ் – சிங்களப் புத்தாண்டு காலத்தில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு வியாபாரங்களை முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகள் நடைபாதை வியாபாரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
கொழும்புத்துறை வியாபாரச் சங்கம் மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது நடைபாதை வியாபாரிகளுடன் சுமூகமாக கலந்துரையாடிய சாகல ரத்நாயக்க , அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்துக்கொண்டதோடு பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தார்.
நடைபாதை வியாபாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசிப்பதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதற்கான குழுவொன்றை நியமிப்பதாகவும் சாகல ரத்நாயக்க உறுதியளித்தார்.
இதுகுறித்து பொலிஸ்மா அதிபருடன் கலந்தாலோசித்த சாகல ரத்நாயக்க, நடைபாதை வியாபாரிகள் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்தார். இதன்போது நடைபாதை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைய அவர்களுக்கான அடையாள அட்டை ஒன்றை விநியோகிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் சீ.டி விக்கிரமரத்ன நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.