தமது சுயலாபத்திற்காக இலங்கை தமிழர் விவகாரத்தை கையிலெடுக்கும் தமிழக அரசியல் தலைவர்கள்
இலங்கையில் உள்ள தமிழர் பிரச்சனையை தமிழக அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்தி வருவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் முன்னணி நாளிதழான தினமலர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘‘இலங்கையில் உள்ள தமிழர் பிரச்னையை தமிழக அரசியல்வாதிகள் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்துகிறார்களா?’’ என்ற கேள்விக்கு 92.8 சதவீதம் பேர் ஆம் என பதிலளித்துள்ளனர்.
7.2 சதவீதம் பேர் அந்தக் கேள்விக்கு “இல்லை” என்று பதிலளித்துள்ளனர்.
இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடந்து வந்த போர் 2009 மே மாதம் இராணுவ நடவடிக்கையில் முடிவுக்கு வந்தது.
அதன் பின்னரும் நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள தமிழ் மக்கள் தெரிவு செய்யப்பட்ட அனைத்து அரசாங்கங்களிடமும் தமது உரிமைகளை கோருகின்றனர்.
அவற்றுள் சுயநிர்ணய உரிமை, காணி, பொலிஸ் அதிகாரங்கள், யுத்தத்தின் போது வடக்கில் காணாமல் போன தமிழர்களுக்கான நீதி என்பவற்றுக்கு தனி இடம் உண்டு.
இதேவேளை, இந்தக் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசியல்வாதிகள் இந்திய மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதுடன், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போதும் இந்த விடயம் பேசப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 26ஆம் திகதி ஜனாதிபதியின் முயற்சியின் கீழ் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் ஆலோசிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எனினும், தினமலரில் கருத்துக்கணிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, நாட்டின் தென்பகுதியில் உள்ள பெரும்பான்மையான சிங்கள சமூகத்தினரிடையே நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சனை குறித்து வைத்திருக்கும் கருத்துக்கு நிகராக இருப்பது சிறப்பு அம்சமாகும்.