வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இரட்டை கொலை – விசாரணையில் திடீர் திருப்பம்
வவுனியா தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்கு தீ வைத்து தம்பதி உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா – தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களை 24 மணி நேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாஜினி தேவராசா உத்தரவிட்டார்.
வவுனியா – தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகுந்த குழுவொன்று வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் பெற்றோலை ஊற்றி வீட்டுக்கு தீயிட்டனர்.
இச்சம்பவத்தில் மூச்சுதிணறல் காரணமாக வீட்டில் இருந்த பாத்திமா சமீமா என்ற 21 வயது இளம்குடும்ப பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததுடன் மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அதில் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இறந்த பெண்ணின் கணவனான ச. சுகந்தன் என்பவர் சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த சுகந்தனுக்கும் அந்த பகுதியில் உள்ள திருமணமான கிராம சேவகர் ஒருவருடன் தொடர்பு இருப்பது தற்போது தெரியவந்துள்ளதென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், விசாரணையில், கிராம சேவகருக்கு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு திருமணமான நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்ட இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு இந்த கொலையை செய்ய ஒப்பந்தம் கிடைத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.