கூட்டமைப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனர் தெரிவித்துள்ளார்.
13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், அதிகாரப் பகிர்வை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தமது கூட்டணியின் பிரேரணை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
குறித்த பிரேரணை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.